தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெங்களூருவில் ஒப்பந்த பணியாளர்களை (டெலிவரி பார்ட்னர்களுடன்) சந்தித்து உரையாடினார். அப்போது பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அத்துடன் ராகுல் காந்தி அருகில் இருந்த உணவகத்தில் பணியாளர்களுடன் சேர்ந்து மசாலா தோசை சாப்பிட்ட சம்பவம இணையத்தில் வைரலாகி வருகிறது. 






கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தில் பிரச்சாரம்  மேற்கொண்ட போது அங்கு இருந்த டெலிவெரி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் போன்ற சூழ்நிலை காரணமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்தி அவர்களிடம் கோரிக்கைகள் என்ன?  தங்களுக்கு பிடித்த கால்பந்து வீரர் யார்? என மசாலா தோசை சாப்பிட்டுக்கொண்டே ஜாலியாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது.


காங்கிரஸ் கட்சி தரப்பில் இது தொடர்பாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில் “ பெங்களூருவில் மட்டும் 2,00,000 பேர் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையில் அவர்களுக்காக குறிப்பிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது, முக்கியமாக:


 1. ₹3,000 கோடி மதிப்பில்  கிக் தொழிலாளர் நல வாரியம் அமைக்க 


2. ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மணிநேர ஊதியத்தை உறுதி செய்தல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒப்பந்த ஊழியர்களுடன் உரையாடிய பின் ராகுல் காந்தி அங்கு இருக்கும் டெலிவெரி பணியாளருடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.