சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.


சைதை துரைசாமியின் மகன் மாயம்:


கஷங் நாலா பகுதியில் இந்த விபத்து நடந்தது. இதில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொரு பயணி காயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மட்டும் ஆற்றில் விழுந்து மாயமானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் அறிந்த துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் இமாச்சல பிரதேசம் சென்றனர். அங்கு சைதை துரைசாமி இமாச்சல பிரதேச போலீசாருடன் மீட்பு பணிகள் குறித்து உடனிருந்து கேட்டு வருகிறார். இந்த சூழலில், இமாச்சல பிரதேச போலீசார் வெற்றி துரைசாமியின் நிலை குறித்து கண்டறிய 2 நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இது துரைசாமி குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


மீட்பு பணியில் சிரமம்:


இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 645 சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், துரைசாமியின் மகனை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மூடப்பட்ட சாலைகளில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் அடங்கும்.


கடந்த 24 மணிநேரத்தில் சிர்கான் 35 செ.மீட்டர், காத்ராலா 30 செ.மீட்டர், மணாலி 23.6 செ.மீட்டர், நர்கண்டா 20 செ.மீட்டர், கோண்ட்லா 16.5 செ.மீட்டர், கீலாங் 15.2 செ.மீட்டர் அளவு பனிப்பொழிவு பெய்துள்ளது. இதனால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து அந்த மாநில போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!


மேலும் படிக்க: அரசு பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வருகிறது புது சட்டம்