நாட்டில் இதுவரை நடைபெறாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அதை வளைத்து பிடித்துள்ளனர்.


விமானம் மூலம் கடத்தல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நாட்டின் முக்கிய விமான நிலையங்களான டெல்லி, மும்பை, சென்னை ஆகியவை வழியே அதிக அளவில் கடத்தல் நடைபெறுவதும் அதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதுமாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.


இதுவரை நடைபெற்றிராத மெகா கடத்தல்:


இந்த நிலையில், நாட்டில் இதுவரை நடைபெறாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டுப் பணம் கடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அதை வளைத்து பிடித்துள்ளனர்.


தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூவர், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர். பயணப் பையில் வைக்கப்பட்டிருந்த காலணிகளுக்குள் வெளிநாட்டு நாணயம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியாவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு விமானத்தில் ஏறச் செல்லும்போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், "அவர்களது பொருட்களை விரிவாக ஆய்வு செய்ததில், அவர்களிடமிருந்து ₹ 10.6 கோடிக்கு சமமான வெளிநாட்டு நாணயம் (7,20,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 4,66,200 யூரோக்கள்) மீட்கப்பட்டது.


அதிர்ந்து போன சுங்கத்துறை அதிகாரிகள்:


வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் இந்த அளவுக்கு மிக பெரிய மதிப்பில் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டதில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து மூத்த சுங்கத்துறை அதிகாரி பேசுகையில், "கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் மைனர்" என்றார்.


சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் ஒரு பெண் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 


சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது கவலையை ஏற்படுத்தியது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 94.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.