வழக்கமான சுற்றுலா மற்றும் விடுமுறைகள் உங்களுக்கு சலித்துவிட்டதா? உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு வட்டத்தை விட்டு நீங்கள் வெளியே வர விரும்பினால் உங்களுக்கான ஒரு மறக்கமுடியாத சுற்றுலா ஐடியா காத்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநில சிறைத்துறை உங்களுக்கான தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. அங்கே உள்ள ஹல்த்வானி சிறையானது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இரவுக்கு வெறும் 500 ரூபாய்க்கு உண்மையான "சிறை அனுபவத்தை" வழங்குகிறது. பிரபல தினசரி நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி, சிறைச்சாலையில் ஒரு இரவைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறை நிர்வாகம் சிறையின் கைவிடப்பட்ட பகுதியை மறுசீரமைப்பு செய்துள்ளது. சிறைச்சாலையின் துணை சிறை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சிறை வளாகத்தில் சில மணிநேரம் செலவிட அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து சிறைக்கு அடிக்கடி உத்தரவுகள் வந்ததாகவும் அதன்படி இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.


இவர்களில் பலர், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்தில் இருந்து விடுபட, குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழிக்குமாறு அவர்களது ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதன் கீழ் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலை வரவிருக்கும் காலத்தில் அவர் சிறைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படும். இதற்கான தோஷத்தைப்போக்க அவர்கள் ஒருநாள் சிறையில் தங்குவார்கள். இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட வசதி சிறையில் உள்ள சூழலை உணர விரும்பும் அனைவருக்கும் கிடைக்கும்.




சதீஷ் சுகிஜா இந்த திட்டத்தை சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது, அவர் இந்த யோசனையை பாராட்டியது மட்டுமல்லாமல், இது தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்ப சுகிஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத்தளமாகப் பார்வையிடும் வகையில் நாட்டின் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே இருந்து வந்தது. அந்தமான் தீவுகளின் காலாபானி சிறைதான் அது. ஆனால் அங்கு தங்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை.


அந்த வகையில் சிறை சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் மாற்றப்படுவது முதல்முறையாக உத்தரகாண்ட்டில்தான் நடக்கிறது. என்னம்மா யோசிக்கறாய்ங்க!.


கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு மாடு மேய்க்கும் வேலை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மாநில அரசுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள் மூலம் சில மாநிலங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் அரசு தங்கள் பாணியில் பசு மாட்டின் மூலம் வேலை வாய்ப்பை வழங்க முடிவு செய்தது.


உத்தரகாண்ட் விலங்குகள் நலவாரியத்தின் கூட்டம் விலங்குகள் நல அமைச்சர் சவுரப் பகுகுனா தலைமையில் ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது, கைவிடப்பட்ட விலங்குகளின் நலனைக் காக்கும் வகையில் அதற்கான ஆண்டு ஒதுக்கீடான 2.5 கோடி ரூபாயில் இருந்து, 15 கோடி ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும், பசுக்களுக்கு தீவனம் வழங்க ஒரு நாளைக்கான தொகையையும் உயர்த்தியுள்ளது. ஒரு பசுவிற்கு தீவனத்திற்காக ஒருநாளைக்கு ரூ.6 செலவிடப்பட்ட நிலையில், புதிய உயர்வின் படி ஒரு நாளைக்கு 30 ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களை கைவிடப்பட்ட பசுமாடுகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் பகுகுனா தெரிவித்திருந்தார். மேலும், பசுக்கள் மற்றும் மற்ற விலங்குகள் கடத்தப்படுவதைத் தடுக்க உத்தரகாண்டில் உள்ள 13 மாவட்டங்களுக்கு தலா 12.5 லட்சம் ரூபாய் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.