உத்தரப் பிரதேசம் சஹாரன்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தின் கழிவறையின் தரையில் சமைத்த சாதம் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சஹரன்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்று நாள் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடிப் போட்டியில் பங்கேற்கும் சுமார் 200 வீரர்களுக்கு இதே சாதம்தான் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சஹாரன்பூரின் விளையாட்டுத்துறை அலுவலர் அனிமேஷ் சக்சேனா, இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். மேலும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறினார்.
“இங்கு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது. நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள பாரம்பரிய செங்கல் அடுப்பில் பெரிய பாத்திரங்களில் அரிசி, பருப்பு, சப்ஜி உள்ளிட்ட உணவுகள் சமைக்கப்பட்டன" என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விளையாட்டு வீரர் ஒருவர் கூறுகையில், “அடுப்பில் சமைக்கப்பட்ட சாதம், ஒரு பெரிய தட்டில் எடுக்கப்பட்டு கழிவறையின் வாயிலுக்கு அருகில் உள்ள தரையில் வைக்கப்பட்டது. சாதம் இருந்த தட்டுக்குப் பக்கத்தில், தரையில் ஒரு காகிதத்தில் மிச்சமிருந்த பூரிகள் வைக்கப்பட்டன. பின்னர் வீரர்களுக்கு அது மதிய உணவாக வழங்கப்பட்டது.
ஒரு சில வீரர்கள் மைதான அலுவலர்களிடம் இந்த விஷயத்தை எழுப்பினர். அந்த அலுவலர், விளையாட்டுத்துறை அலுவலரான அனிமேஷ் சக்சேனாவிடம் எடுத்து சென்றார். இதையடுத்து, சமையல்காரர்களை அவர் கண்டித்தார்.
"இடப்பற்றாக்குறை இருந்தது. எனவே, மைதானத்தின் குளத்தின் அருகே உணவு சமைக்கப்பட்டது" என விளையாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விளையாட்டு வீரர்களுக்கு தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
கிரிக்கெட்டை தவிர்த்து, பிற போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் பிற விளையாட்டுகளை விளையாட்டாக கூட மதிப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சூழல் இப்படி இருக்க, ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்பது சரியான ஒன்றாக இருக்காது என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பள்ளிகளில் தொடங்கி, கல்லூரிகள் வரை, அனைத்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், வீரர்களுக்கு தரமான உபகரணங்களை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.