கால்நடைத் தீவின ஊழல் தொடர்பான மற்றொரு முக்கியமான வழக்கில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். போலி ரசீதுகள் தாக்கல் செய்து, அரசு கரூவூலத்தில்  இருந்து பல கோடி ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பான நான்கு வெவ்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். 


கால்நடைத் தீவன ஊழல் ( Fodder Scam) என்பது பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் ஆகும். பீகாரில் 1990-ஆம் ஆண்டு முதல்வராகப் பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் கால்நடைத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து உரிய விசாரணை கோரி வழக்குரைஞர்கள் சிலர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலகம் (சிபிஐ) விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் சுமார் 13 ஆண்டுகள் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தன. 


முதலாவதாக, 37.67 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் லாலு கடந்த 2013ம் ஆண்டு  5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 




இரண்டாவதாக, ரூ.89.27 லட்சம் மோசடி தொடர்பான தியோகர் கருவூல வழக்கில்  கடந்தா 2017ம் ஆண்டு லாலு பிரசாத யாதவுக்கு 3.5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கி நீந்திமன்றம் உத்தரவிட்டது.  


மூன்றாவதாக, ரூ.33.67 கோடி ருபாய் நிதி ஏய்ப்பு தொடர்பான மற்றொரு கருவூல வழக்கில் லாலுவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


நான்கவாதாக, ரூ.3.5 கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பான தும்கா கருவூல வழக்கில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, அனைத்து வழக்குகளிலும் இருந்து பிணை பெற்று சிறைக்கு வெளியே வாழ்ந்து வருகிறார்.       


இந்நிலையில், கால்நடைத் தீவன ஊழலில் மிக முக்கிய வழக்காக கருதப்படும் டொராண்டா கருவூல (Doranda Treasury case)வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இன்று காலை, ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில்,  லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் கால்நடைத் தீவனம் வாங்கியதில், 139.5 கோடி ருபாய் ஊழல் நடைபெற்றிருப்பதை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கான தண்டனை  விவரங்கள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 


மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத் தண்டனை பெற்றால், தற்போது தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் வாயிலாக லாலு பிரதாக பிணையைப் பெறலாம். தண்டனை காலம் மூன்றாடுகளுக்கு மேல் இருந்தால், லாலு உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார். பின்பு, பாட்னா உயர்நீதிமன்றத்தில் பிணையைக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.