மும்பையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் ஆண் பயணி ஒருவர், ஹைஜாக் திட்டம் குறித்து பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, பயணி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பாதுகாப்பு அதிகாரி:


சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த அந்த பயணி பேசிக்கொண்டிருந்ததை விமானக் குழுவினரும் மற்ற பயணிகளும் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து, விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.


விமானத்தில் சோதனை நடத்தப்பட்டு, அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விமானம் மற்ற பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரவு 7 மணியளவில் விமானம் டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். விமான குழு உறுப்பினர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.


விமானத்தை கடத்த முயற்சியா?


விமான குழுவினரும், மற்ற பயணிகளும், குறிப்பிட்ட அந்த ஆண் பயணி தனது மொபைல் ஃபோனில் பேசுவதைக் கேட்டனர். அவர் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அகமதாபாத் செல்ல விமானத்தில் ஏற போகிறேன், உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் என்னை அழைக்கவும் என அந்த பயணி பேசியுள்ளார்.


கடத்தலுக்கான அனைத்து திட்டமிடல்களும் செய்யப்பட்டுள்ளன என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் அந்த பயணி கூறியுள்ளார். அவர் இப்படி பேசுவதைக் கேட்டதும் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் பயந்து பலர் எழுந்து நின்றனர். விமான குழு உறுப்பினர்கள் விமானத்தின் பாதுகாப்பு ஊழியர்களை வரவழைத்து, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் அவரை ஒப்படைத்தனர்.


பின்னர் ரித்தேஷ் ஜுனேஜா என அடையாளம் காணப்பட்ட பயணி, சஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், 27 வயதான விமானக் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், 2021 முதல் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது" என்றார்.


இந்திய தண்டனை சட்டம், பிரிவு 336 (மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தது) மற்றும் 505 (2) (மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையில் பேசியது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுகுறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணையில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். விஸ்தாரா தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் நடத்தைக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் உறுதியாக நிற்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.