விமானத்தில் சண்டை:


தாய்லாந்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் பயணிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அந்த சண்டை எப்படி தொடங்கியது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது, விமான குழுவினரின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஒரு பயணி பின்பற்ற மறுத்துள்ளார். நடைபெற்ற சண்டைக்கு இதுதான் தொடக்க புள்ளியாக இருந்துள்ளது.


சண்டை ஏன்?


சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள விமான நிறுவனம், "கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த விமானம் கிளம்புவதற்கு முன்பு சண்டை நிகழ்ந்துள்ளது" 


"விமானம் புறப்படுவதற்காக விமான இருக்கைகளை நிமிர்த்தி வைக்க விமான குழுவினர் பயணிகளை கேட்டு கொண்டனர். உள்ளூர் விமானங்களில் இந்த விதி என்பது நிலையான பாதுகாப்பு நடைமுறையாக உள்ளது. ஆனால், பயணி ஒருவர், தனக்கு முதுகுவலி இருப்பதாகக் கூறி, இருக்கையை சரிசெய்ய மறுத்துவிட்டார்.


புறப்படும் முன்பும் தரையிறங்கும் போதும் இருக்கையை சரிசெய்வதற்கான காரணத்தையும் விமானக் குழுவினர், பயணியிடம் பலமுறை விளக்கினர். அவசரநிலையின் போது, ​​சாய்ந்திருக்கும் இருக்கையில் இருந்து வெளியேறுவது  கடினமாக இருக்கும் என்று அவரிடம் சொன்னார்கள். அவசர கால தரையிறக்கத்தின்போது விமானம் மோதி கொள்ளும் பட்சத்தில் சாய்ந்த இருக்கையில் இருந்து தப்பிப்பது கடினம்.


கைகலப்பு:


பலமுறை கோரிக்கை விடுத்தும், பயணி அதற்கு இணங்காமல், தனது இருக்கையை சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் விதிகளை பின்பற்றவில்லை என்றால் விமானக்குழுவினர் கேப்டனிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. கேப்டனிடம் சொல்ல சுதந்திரம் உள்ளது. ஆனால், தனது இருக்கையை சரி செய்ய மாட்டேன் என்று பயணி, குழுவினரிடம் கூறியுள்ளார். 


உடனேயே, மற்ற விமானிகள் பயணியைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது, கைகலப்பாக மாறியது" என விமான நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.


 






இருக்கையை சரிசெய்ய மறுத்த பயணியை மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை வீடியோவில் காணலாம். விமானத்தில் இருந்த ஊழியர்களும் மற்றவர்களும் தாக்குதலை நிறுத்த முயல்கின்றனர். அந்த பயணியும், தன்னை தற்காத்து கொள்ள முயல்கிறார்.


இந்த சம்பவம் குறித்து கேப்டனுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சண்டை நிறுத்தப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட பயணிகள் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புவதையும், விமானம் கொல்கத்தாவுக்குப் புறப்படுவதையும் பணியாளர்கள் உறுதி செய்தனர்.