டிஸ்சார்ஜ்:


கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


திங்கள்கிழமை மதியம் 12 மணி அளவில் மருத்துவமனையின் தனியார் வார்டில் அவர் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன.


விரைவில் பட்ஜெட்:


அன்று மதியமே, அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. வயிற்றில் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.


கடந்த 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார். 1980ஆம் ஆண்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 


பின்னர், 1986ஆம் ஆண்டு பரகலா பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த பரகலா சேஷாவதரத்தின் மகன்தான் பிரபாகர். இவரின் தாயாரும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.


பல்வேறு பொறுப்புகள்:


திருமணத்திற்குப் பிறகு லண்டனில் வசித்து வந்த நிர்மலா, அவரது கணவருடன் 1991இல்  இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, 2003 முதல் 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில், தேசிய பெண்கள் ஆணையத்தில் நிர்மலா சீதாராமன் பணியாற்றினார்.


அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுஷ்மா ஸ்வராஜின் பரிந்துரைக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 


பிறகு, 2010ஆம் ஆண்டில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் செய்தித்தொடர்பாளராக பல்வேறு பகுதிகளிலும் பணியில் இருந்தாலும், மோடியின் குஜராத்தில்தான் மிக அதிகளவு கவனம் செலுத்தினார் நிர்மலா. 


 






2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானியா அல்லது நரேந்திர மோடியா என்று மூத்த தலைவர்களே குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில்கூட மிகத்தீவிரமாக மோடியை ஆதரித்தார் நிர்மலா. 2014ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.