பயணங்களின் போது நம்மை ஈர்க்கும் மனிதர்களில் எப்போதும் குழந்தைகள் முதலிடத்தைப் பிடித்துவிடுவார்கள்.


பார்த்த நொடியில் நம்மை ஈர்த்து ரசிக்க வைக்கும் இதே குழந்தைகள், பயணத்தில் அசவுகரியமாக உணர்ந்தாலோ அல்லது அழத் தொடங்கினால் முடிந்தது கதை!


ஏன் எதற்கென்றே காரணம் தெரியாமல் பயணத்தில் கதறியழும் குழந்தைகள் மற்றும் ஒரு இடத்தில் அமர முடியாமல்  சேட்டை செய்யும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல.


பேருந்து, ரயில் பயணங்களிலேயே இது மிகக்கடினமான காரியமாக இருக்கும் சூழலில், பறக்கும் விமானத்தில் அசௌகரியமாக உணர்ந்த குழந்தை ஒன்றை தன் தோளில் போட்டு அரவணைத்தபடி விமான ஊழியர் ஒருவர் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஏர் இந்தியா விமானத்தில் ஜீவன் வெங்கடேஷ் எனும் பயணி முன்னதாக பயணம் மேற்கொண்ட நிலையில், அசௌகரியமாக உணர்ந்த தன் குழந்தையை சமாதானம் செய்த ஊழியர் நீல் நித்தின் என்பவரைக் கண்டறிந்து நன்றியும், இத்தகைய ஊழியரைக் கொண்ட நிறுவனத்தை வாழ்த்தியும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி லைக்ஸ் அள்ளி வருகிறது.






 


இதே போல், முன்னதாக பிரேசிலில் விமானப் பணிப்பெண் ஒருவர் குழந்தை ஒன்றை இதேபோல் அரவணைத்து சமாதானப்படுத்திய வீடியோ இணையவாசிகள் மத்தியில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.


 






தொடர்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை இந்த விமான பணிப்பெண்  தூக்கி அரவணைத்து தூங்க வைத்த வீடியோ இன்ஸ்டாவாசிகளின் இதயங்களை வென்றது.