அரசியல் கட்சிகள் அறிவிக்கும் நிலையற்ற இலவசத் திட்டங்களால் பொதுநிதி வீணடிக்கப்படுவதாகவும், வளங்களை அணுகுவதில் சமமற்ற நிலை உருவாகுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக, அறிவுப்பூர்வமற்ற, அனாவசியமான இலவச நலத்திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சின்னங்களை முடக்கவும் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து உரியபதிலை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் கோவா, மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 7-ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், உத்ரகாண்ட் கோவா சட்டப்பேரவை தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபில் பிப்ரவரி 20ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனையடுத்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்திடவும், தேர்தல் வெற்றியை உறுதி செய்திடவும் எண்ணற்ற இலவச நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா இந்த நலத்திட்ட அறிவிப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்த இலவசத் திட்டங்களை பட்டியலிட்டார். அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் யாவும் வளர்ச்சியின் நோக்கங்களாக இல்லை. வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நிலையற்ற, முரண்பாடான இலவசத் திட்டங்களை கட்சிகள் அறிவித்து வருகின்றனர்.
உதாரணமாக, பஞ்சாப் தேர்தல் பரப்புரையில் 18 வயது கடந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்தது. இதனையடுத்து, பெண்கள் வாக்கு வங்கியை கைப்பற்ற, சிரோமணி அகாலி தளம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.2000 தருவதாக வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலே சென்று, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படுவதுடன், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில், 12-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன், பட்டப்படிப்பு படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஸ்கூட்டி, பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து, ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ஆண்டுக்கு 8 இலவச கேஸ் சிலிண்டர்கள், இலவச மருத்துவம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது என்ற மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இலவசத் திட்டங்களால் பெரும் அளவு பொது வளங்கள் பாதிக்கப்படுவதுடன் வாய்ப்புகள் வீணடிக்கப்படுகின்றன. எனவே, இத்தகைய அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், சின்னங்களை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள்:
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இலவச நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதன் காரணமாக தீவிரமான பெரும் பிரச்னைகள் உருவாகலாம் என்றும் தெரிவித்தனர். நிலையற்ற இலவசத் திட்டங்களால் பொதுநிதி வீணடிக்கப்படுவதாகவும், வளங்களை அணுகுவதில் சமமற்ற நிலை உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்
உங்கள் அணுகுமுறையில் ஒருதலைபட்சம் காணப்படுகிறது. மனுவில் ஏன் இரண்டு கட்சிகள் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்று நீதிபதி ஹிமா கோலி மனுதாரரிடம் சில கேள்விகளை எழுப்பினர்.