Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக  தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது. 


அயோத்தி ராமர் கோயில்:


அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது.  


கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


பொருத்தப்பட்ட தங்க கதவு:


கும்பாபிஷேக ஏற்பாடு அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நுழைய தங்கத்தால் செய்யப்பட்ட கதவு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவின் போட்டோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கதவில் யானைகளில் வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வெளியாகி உள்ளது. 






பாரம்பரிய முறையில் 3 அடுக்குகளாக கோயில் அமைய உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. கோயில் கிழக்கு மேற்காக 380 அடி நீளமும், 250  அடி அகலமும் கொண்டது. கோயிலில் மொத்த உயரம் 161 அடியாகும். இந்த ராமர் கோயில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் உள்ளன.


கோயில் தூண்கள் மற்றும் சுவர்கள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயில்களில்,நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை  என ஐந்து மண்டபங்கள் உள்ளன.


கோயிலில் மாற்றுத்திறனானளிகள் மற்றும் முதியவர்கள் வந்த செல்ல ஏதுவாக, சாய்தளங்கள், லிப்ட் வசதி அமைக்கப்படுகிறது. மேலும்,  அடுத்த மூன்று நாட்களுக்குள் ராமர் கோவிலில் கருவறையின் பெரிய அளவிலான வாயில் உட்பட 13 தங்க கதவுகள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.