Bangladesh India Border: சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் நோக்கில்,  இந்திய - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.


இந்திய - வங்கதேச எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு:


இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையால், வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவலாம் என அஞ்சப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில், இந்திய - வங்கதேச எல்லையில் 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ள அனைத்து அமைப்புகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூடுதல் படையினரை குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, கூடுதல் டைரக்டர் ஜெனரல் (கிழக்கு கட்டளை) ரவி காந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு வங்கம்) மணீந்தர் பிரதாப் சிங் ஆகியோர் எல்லைப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து:


எல்லை பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து களத் தளபதிகளும் தரையில் இருக்குமாறும், அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாக எல்லைப் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.


வங்கதேசத்துடன் எல்லையை பகிரும் இந்திய மாநிலங்கள்:


வங்கதேசம் மாநிலத்துடன் மேற்குவங்க மாநிலம் மொத்தமாக 2 ஆயிரத்து 217 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதுபோக, திரிபுரா மாநிலம் 856 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மேகாலயா 443 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அசாம் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மற்றும் மிசோரம் 318 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தங்களது எல்லைகளை, வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லை பகுதிகள் தற்போது உச்சகட்ட கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையில், மேகாலயா அரசாங்கம் வங்கதேசத்துடன் பகிரும் 445 கிமீ நீளமுள்ள எல்லை பகுதிகளில், மாநில மற்றும் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி நடவடிக்கையாக இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது..


அமித் ஷா உறுதி:


இந்த சூழலில், திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக, திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தொலைபேசியில் பேசினேன். இந்தியா எல்லைகள்  சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்" என்று திப்ரா மோதா தலைவர் தெரிவித்துள்ளார்.