Atal Setu Accident: மும்பையில் உள்ள நாட்டின் நீளமான அடல் சேது கடற்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், கவிந்து பல மீட்டர் தூரத்திற்கு உருண்டு, புரண்டு சென்றுள்ளது.


நாட்டின் நீளமான கடற்பாலம்:


மும்பையில் 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலம், நாட்டின் நீளமான கடல்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த பாலத்தில் பயணம் செய்ய இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடல் சேது பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாலத்தின் மீது செல்ல அனுமதிக்கப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கட்டணமும் பேசுபொருளாகியுள்ளது.






கடற்பாலத்தில் கார் விபத்து:


இந்நிலையில், பாலத்தின் மீது கட்டுப்பாடுகளை மிறி அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “பாலத்தின் மீது அதிவேகமாக சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இரண்டு கார்களுக்கு மத்தியில் புகுந்து சென்ற அந்த காரின், பாலத்தின் நடுவே இருக்கும் பக்கவாட்டுச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது. தொடர்ந்து, உருண்டு புரண்டு பல அடி தூரத்திற்குச் சென்ற அந்த கார், ஒரு கட்டத்தில் மீண்டும் நிலைத்து நின்ற” காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை அந்த பாலத்தில் மற்றொரு காரில் பயணித்த ஒருவர் படம்பிடித்துள்ளார். அதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.


நாட்டின் நீளமான கடல் பாலம்:


செவ்ரி-நவ ஷேவா பகுதியை இணைக்கும் அடல் சேது என்ற இந்த பாலம், 17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் மிக நீளமான கடல் பாலமாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை அளிக்கும் வகையில் அடல் சேது என பாலத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.  21.8 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தால்,  செவ்ரி-நவ ஷேவா இடையேயான பயணம், இரண்டு மணிநேரத்தில் இருந்து சுமார் 15-20 நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு 100 கி.மீ வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.