Ayodhya ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நகரம் முழுவதும் மூன்றடுக்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஏராளமான பக்தர்கள் வருகை தரும் தரம்பத் மற்றும் ராம்பத்தில் இருந்து, ஹனுமன்கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் சாலையின் பைலேன்கள் வரை, போலீசார் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (ஏடிஎஸ்) போலீசார் நேற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நகரின் ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் முள்வேலிகள் இணைக்கப்பட்ட நகரக்கூடிய தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக விவிஐபி நடமாட்டத்தின்போது பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.​ உத்தரபிரதேச காவல்துறை அயோத்தி நகரை சிவப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம் என பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. 


10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்:


கோயில் நகரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளில்லா விமானங்கள் அயோத்தி முழுவதும் வான்வழி கண்காணிப்பை செய்து வருகின்றனர். கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்கள் தரையில் வெடிபொருட்கள் அல்லது கண்னிவெடிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்கின்றன. தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இயங்கும், என்டி-மைன் ட்ரோன்கள், நிலத்தடி வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்பெக்ட்ரோமீட்டர் அலைநீளம் கண்டறிதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. கண்காணிப்பு பணிகளுக்காக10,000 சிசிடிவி கேமராக்கள் நகரம் முழுவதும்  பொருத்தப்பட்டுள்ளன.


தயார் நிலையில் ஸ்னைப்பர் வீரர்கள்:


நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பன்மொழித் திறன் கொண்ட போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிபொருட்களை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள் குழுவுடன், இலக்கை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் ஸ்னைப்பர் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களின் உதவியுடன் சரயு ஆற்றங்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சரயு நதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்க பயிற்சி பெற்ற பல NDRF குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படையால் (NSG) பயிற்சி பெற்ற 100 SSF கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறையை பாதுகாத்திட சிஆர்பிஎஃப் படையினர் பிரதான கோயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.  மாநில காவல்துறை மற்றும் PAC யைச் சேர்ந்த 1,400 பணியாளர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள சிவப்பு' மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு பணிகளை சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) மேற்கொண்டுள்ளது. 


பக்தர்களுக்கான வசதிகள்:


ரம்பாத், பக்தி பத் மார்க், தர்ம பத் மார்க், பரிக்ரமா மார்க், பந்தா மார்க், தெஹ்ரி பஜார் ரம்பாத், மஹோப்ரா மார்க் மற்றும் உன்வால் மார்க் உள்ளிட்ட 51 இடங்களில் 22,825 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நிலவும் குளிரை கருத்தில் கொண்டு மருத்துவ அவசர நிலைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகர மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவர்கள் அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என, எய்ம்ஸ் மருத்துவர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.