காரின் பின் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை அறிவித்துள்ளார். மும்பை அருகே கார் விபத்தில் சிக்கி டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்த இரண்டு நாட்கள் ஆன நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.






மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று வேகமாக சென்ற காரில் பின் சீட்டில் அமர்ந்து மிஸ்திரி பயணித்துள்ளார். அப்போது, அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், இடித்த வேகத்தில் அவர் முன் திசையில் தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.


பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட்களை கட்டாயம் பயன்படுத்துவது குறித்து பேசியுள்ள நிதின் கட்கரி, "அபராதம் வசூலிப்பது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் ஆனால் விழிப்புணர்வை பரப்புவதே நோக்கமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரபலங்கள் சாலைப் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு செய்வதாக கூறிய அவர், ஊடகங்களின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும்" தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசி அவர், "ஏற்கனவே, பின் இருக்கையில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஆனால் மக்கள் அதை பின்பற்றுவதில்லை. பின் இருக்கையில் இருப்பவர்கள் முன் இருக்கைகளைப் போல பெல்ட் அணியாமல் இருந்தால் சைரன் ஒலிக்கும். மேலும் அவர்கள் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.


2024க்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாய் ஆகும். கேமராக்கள் உள்ளன. எனவே, விதிகளை பின்பற்றாதவர்களை எளிதாக கண்டு பிடிக்கலாம்" என்றார். மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், சாலை விபத்துக்களில் சிக்கி 59,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 80,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று நெடுஞ்சாலை போலீசார் இன்று வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


'இந்தியாவில் சாலை விபத்துகள் - 2020' என்ற தலைப்பில் வெளியான அறிக்கையின்படி, 11 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் மற்றும் காயங்கள் சீட் பெல்ட்களைப் பயன்படுத்தாததால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஹெல்மெட் பயன்படுத்தாததால் 30.1 சதவீத இறப்புகள் மற்றும் 26 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன.