பிரதமர் மோடியின் கல்வித் தகுதியைத் தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 


7 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கில் மத்திய தகவல் ஆணையம், கெஜ்ரிவாலுக்கு அவர் கேட்கும் தகவலை அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலயில் இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் தகவல் ஆணையத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ததோடு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டது. நீதிபதி பைரன் வைஷ்ணவ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் கெஜ்ரிவால் இந்த தொகையை குஜராத் சட்ட சேவைகள் ஆணையத்திற்கு 4 வாரங்களுக்குள் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த உத்தரவிற்கு கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் பெர்சி கவினா இடைக்கால தடை கோர அதற்கும் நீதிபதி பைரன் வைஷ்ணவ் மறுத்துவிட்டார்.


முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் எம்.ஸ்ரீதர் ஆசார்யலு டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவில் பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான விவரங்களை கெஜ்ரிவாலுக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


மூன்று மாதங்களுக்குப் பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் சிஐசி உத்தரவுக்கு இடைக்கால் தடை விதித்தது. குஜராத் உயர் நீதிமன்ற வழக்கின் காரணமாக நீதிமன்றம் தடை விதித்த்ருந்தது. அதற்கு முதல் நாள் தான் கெஜ்ரிவால் சிஐசி தலைவர் ஆச்சார்யலுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்னைப் பற்றிய அரசு ஆவணங்கள் எதையும் பொதுவெளியில் வெளியிட எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஆணையம் ஏன் மோடியின் கல்வித் தகுதியை மட்டும் வெளியிடாமல் மறைக்கிறது என்று வினவியிருந்தார். இதனையடுத்தே அவர் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு மோடி கல்வித்தகுதி ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


இந்த வழக்கில் முந்தைய விசாரணைகளின் போது குஜராத் பல்கலைக்கழகம், சிஐசியின் உத்தரவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதில் யாரோ ஒருவரின் பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பு எல்லாம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பொது நலன் சார்ந்ததாக ஏற்றுக் கொள்வதா எனக் கண்டனம் தெரிவித்தது.


கடைசியாக இந்த வழக்கில் குஜராத் பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துசார் மேத்தா, பிரதமரின் கல்வித் தகுதி ஏற்கனவே பொது வெளியில் உள்ளது. பல்கலைக்கழகமும் அதன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. ஆர்டிஐ என்பது முக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே உள்ளது தவிர சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளுக்கு அல்ல என்று கூறியிருந்தார்.


இந்தத் தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால், நம் நாட்டின் பிரதமர் என்ன படித்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடவா நமக்கு உரிமையில்லை. நீதிமன்றத்தில் கல்விச் சான்றிதழ்களை காட்ட மறுப்பதை எதிர்க்கிறேன். சான்றிதழை கேட்டதற்காக எனக்கு அபராதம் வேறு விதிக்கப்பட்டுள்ளது. இங்கே என்ன நடக்கிறது? கல்வியறிவற்ற அல்லது குறைந்த கல்வித் தகுதியுடைய பிரதமர் நாட்டிற்கே ஆபத்து என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.