மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் முறைகேடு குறித்து கலந்துரையாடியுள்ளார். சமீபத்தில் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தை முழுமையாக கலைக்குமாறு ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் கோரியதும், அதன்பின் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு முதலானவை இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசப்பட்டன. 


மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பெருநிறுவனங்கள் நிர்வாகத்துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் ராவ், அதே துறையின் செயலாளர் ராஜேஷ் வர்மா ஆகியோர் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 


தனது உரையைத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், `ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் வழக்கு மீதான உச்ச நீதிமன்ற ஆணையின் மீதான கவனத்தைக் குவிக்க இந்தச் சந்திப்பு நடத்தப்படுகிறது. தேவாஸ் நிறுவனத்தைக் கலைக்கும் உத்தரவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்தத் தள்ளுபடி உத்தரவு விரிவாக வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறினார். 



தொடர்ந்து பேசிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக இந்தியா மீதே மோசடி நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார். `ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்தம் காங்கிரஸ் காலத்தில் கையெழுத்திடப்பட்டது. அது இந்தியாவுக்கு எதிரான மோசடி. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் வளங்கள் விற்கப்பட்டன; மத்திய அமைச்சரவைக்குக் கூட இந்த ஒப்பந்தம் குறித்து கூறப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரஸ் ஆட்சியிலேயே காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார்’ எனக் கூறியுள்ளார். 



2011ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணி அரசு ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தது. தேவாஸ் நிறுவனம் சர்வதேச நீதி அமைப்புகளை நாடிய போது, 21 நாள்களில் நடுவரை நியமிக்க வேண்டிய காங்கிரஸ் அரசு அதனைச் செய்யவில்லை என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் `நாட்டின் மிக முக்கியமான வளங்களான அலைவரிசை, செயற்கைக் கோள் முதலானவற்றைத் தனியாருக்கு விற்று, பணம் சம்பாதிப்பது காங்கிரஸ் அரசுகளின் பாணி’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


நிர்மலா சீதாராமன் தொடர்ந்து, `இந்த மோசடிக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் என்பது உச்ச நீதிமன்ற ஆணையின் மூலம் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் அரசு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதை உச்ச நீதிமன்ற ஆணை காட்டுகிறது. ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்தம் என்பது தேசப் பாதுகாப்புக்கு எதிரானது. அமைச்சரவைக்கு விவரங்களை அளிக்காமல், இப்படியான மோசடியை இந்திய மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி செய்திருப்பது குறித்து விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். முதலாளித்துவம் பற்றி பேசுவதற்கான தகுதி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை’ எனக் கூறியுள்ளார்.