பீமா கோரேகான் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் கௌதம் நவ்லகாவின் வீட்டு காவலை ரத்து செய்து கடந்த 2018ஆம் ஆண்டு, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தற்போது, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி எஸ். முரளிதர், டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகிக்கும்போது அந்த உத்தரவை பிறப்பித்தார்.


அந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி எஸ். முரளிதருக்கு எதிராக பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, எழுத்தாளர் ஆனந்த ரங்கநாதன், செய்தி இணையதளமான ஸ்வராஜ்யா ஆகியோர் அவதாறு கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 


கடைசி விசாரணையின்போது, மார்ச் 16ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி விவேக் அக்னிஹோத்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதற்கு விவேக் அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.


தனது வழக்கறிஞர் மூலம் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்த அக்னிஹோத்ரி, சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை நீக்கியுள்ளதாக கூறினார். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர், அந்த ட்வீட்டை அக்னிஹோத்ரி நீக்கவில்லை என்றும் ட்விட்டரே நீக்கியதாகவும் விளக்கம் அளித்தார்.


கௌதம் நவ்லகாவின் குடும்பத்துடன் நீதிபதி முரளிதருக்கு தொடர் இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் பாரபட்சமாக செயல்பட்டு, வீட்டு காவலை ரத்து செய்தார் என்றும் அக்னிஹோத்ரி அவதூறு பேசியிருந்தார்.


நீதிபதி குறித்து ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எஸ்.குருமூர்த்தியும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தார். அவரின் பெயரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.


கடந்த 2017ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'எல்கர் பரிஷத்' மாநாட்டில் கௌதம் நவ்லகா பேசியது அடுத்த நாள், மேற்கு மகாராஷ்டிரவின் புறநகரில் உள்ள கோரேகான் பீமா போர் நினைவிடம் அருகே நடைபெற்ற வன்முறையைக்கு வழிவகுத்தது என புனே காவல்துறை குற்றம்சாட்டியது.


இது தொடர்பான வழக்கில், 70 வயதான நவ்லகா 2020 இல் கைது செய்யப்பட்டார். தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம், இந்தாண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் சர்ச்யை கிளப்பியிருந்தது. 1990களில் காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


இதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் விதமான கருத்துகள் இடம்பெற்றதாக நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் விமர்சித்திருந்தனர்.


இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டு, பல்வேறு பாஜக தலைவர்கள் திரைப்படத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.