வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்னும் மலையாளத் திரையுலக பெண் நடிகர்களுக்கான அமைப்பு அங்கே ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மார்ச் 17 அன்று, கேரள உயர் நீதிமன்றம், மலையாளத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மலையாளத் திரைப்படக் கலைஞர்களின் சங்கம்) மற்றும் கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் போன்ற அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க உட்கட்டமைப்புக் குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்படும். 






இந்த அமைப்பு நீதிமன்றத்திற்குச் சென்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. பாலியல் துன்புறுத்தல், ஊதியத்தில் மற்றும் சினிமாவில் பணிபுரியும் பெண்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்து கேள்விகளைக் கேட்கத் துணிந்ததற்காக மலையாளத் திரையுலகின் விரோதத்தை இந்தக் குழு எதிர்கொண்டது.


WCCன் உறுப்பினர்களில் ஒருவரான நடிகர் பத்மபிரியா கூறுகையில், இந்த உத்தரவின் முக்கியத்துவம், அது சினிமாத்துறையில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்துப் பேசினார். மேலும், இது நீண்ட பயணத்தின் தொடக்கப்புள்ளி எனவும் குறிப்பிட்டுள்ளார்...
 ”சினிமா போன்ற அமைப்புசாரா துறையில் பணியிடச் சூழல் எப்படி இருக்கிறது என்பதை நீதிமன்றம் அங்கீகரிப்பது இதுவே முதல் முறை. தொழில்துறையைப் பற்றிய நமது ஒட்டுமொத்த புரிதலுக்கும், பணியிடத்தில் பாலியல் கொடுமையைத் தடை செய்வதற்கும் இந்தத் தீர்ப்பு முக்கியமான ஒன்று.  தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை தனியொரு நிறுவனமாக நீதிமன்றம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் சினிமாத்துறையில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் முதன்மைப் பொறுப்பு இவர்களையே சேர்கிறது. சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி பணியிடத்தில் பெண்களுக்கான குறை தீர்க்கும் பிரிவை உள்ளகக் குழு வடிவில் நிறுவுவதை கட்டாயமாக்குவது என நீதிமன்றம் அறிவித்திருப்பது ஒரு முக்கியமான முடிவு. இது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத் துறைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அதன் எதிர்கால வழக்குகளில் பயன்படும். அதன் அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான மனிதநேய உரிமைகளை மீட்டெடுக்கப் பேருதவியாக இது இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.