கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வருமாறு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், போட்டியை புறக்கணிக்குமாறு மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பிரிதிநிதிகளிக்கும் இந்திய குடிமக்களுக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்தியாவில் இருந்து தப்பியோடிய ஜாகிர் நாயக், நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பையின் போது இஸ்லாம் குறித்த விரிவுரைகளை வழங்க கத்தார் அரசால் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சாவியோ ரோட்ரிக்ஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நேரத்தில் நாயக்கிற்கு இதுபோன்ற மேடையை வழங்குவது, வெறுப்பைப் பரப்பும் பயங்கரவாத அனுதாபிக்கு இடம் கொடுப்பது போன்றதாகும்.


FIFA உலகக் கோப்பை ஒரு உலகளாவிய நிகழ்வு. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த அற்புதமான விளையாட்டைக் காண வருகிறார்கள். மில்லியன் கணக்கான மக்கள் இதை டிவி மற்றும் இணையத்தில் பார்க்கிறார்கள். 


உலக பயங்கரவாதத்திற்கு எதிராக உலகமே போராடி வரும் இவ்வேளையில், ஜாகிர் நாயக்கிற்கு இடம் கொடுப்பது, ஒரு பயங்கரவாதிக்கு தனது தீவிரவாதத்தையும் வெறுப்பையும் பரப்புவதற்கு ஒரு தளத்தை கொடுப்பது போன்றதாகும். 


 






பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக உலகக் கோப்பை போட்டியை புறக்கணிக்குமாறு நாட்டு மக்களுக்கும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.


ஜாகிர் நாயக் இந்திய சட்டப்படி தேடப்படும் குற்றவாளி. அவர் மீது பணமோசடி குற்றங்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு பயங்கரவாத ஆதரவாளர். உண்மையில், அவர் பயங்கரவாதிக்குக் குறைவானவர் அல்ல.


பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை வெளிப்படையாக ஆதரித்த அவர், இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் வெறுப்பையும் பரப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்" என்றார்.


இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜாகிர் நாயக் தொடங்கிய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (IRF) சட்டவிரோத அமைப்பாக அறிவித்து ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது மத்திய உள்துறை அமைச்சகம்.


கால்பந்து உலக கோப்பை நடைபெற்று வரும் கத்தாருக்கு மதபோதகர் ஜாகிர் நாயக் வந்துள்ளார். தொடர் முழுவதுமே இங்கே இருந்து அவர் மத விரிவுரைகளை வழங்குவார் என கத்தார் அரசுக்கு சொந்தமான விளையாட்டு சேனலான அல் அரேபியா நியூஸ் செய்தி வெளியிட்டது.