உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவர், ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிடும்  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்துள்ளது. இதனை வீடியோ எடுத்து ஒருவர் பதிவிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 






பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுத்தம் செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவர்கள் நிரம்பியிருந்த வகுப்பறையில் ஆசிரியர்கள் சண்டையிட்டுக் கொள்வதும், ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக்கொள்வதையும் வீடியோவில் காண முடிகிறது.மாணவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த சண்டை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீடித்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பார்த்த மாணவர்களுள் சிலர் , அவர்களை விலக்கிவிடவும் முற்பட்டிருக்கின்றனர். ஆனால் எவ்வித பலனும் இல்லை.



இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தகராறு செய்த மூன்று ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ப்ரீத்தி நிகாம் பள்ளியின் தலைமையாசியர், நஹித் ஹாஷ்மி ஒரு உதவி ஆசிரியராகவும், புஷ்பலதா பாண்டே பரிசாரிகா (பெண் உதவியாளர்) ஆகிய மூவரும் தற்போது இடைக்கால நீக்கத்தில் இருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த  நெட்டிசன்களில் சிலர் “ இந்த மாதிரியான வீடியோக்கள் வெளியே வருவது நல்லது. மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆலோசனை தேவை “ என தெரிவித்துள்ளனர்.







மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் . தனிப்பட்ட விரோதம் , தனிப்பட்ட வஞ்சம் , தனிப்பட்ட பிரச்சனைகளை மாணவர்களிடம் காட்டுவதோ அல்லது மாணவர்கள் முன்னிலையில் நிகழ்த்துவதோ நிச்சயமாக மோசமான முன்னெடுப்புதான். ஆசிரியர்களின் இவ்வித செயல்பாடுகள் , நிச்சயம் மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்க கூடாது.