சுங்கச் சாவடிகளில் இனி ஆண்டு முழுமைக்குமான ஃபாஸ்ட்டேக் பாஸ் முறையை மத்திய அரசு நாளை அறிமுகம் செய்கிறது. அதாவது, ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, 3,000 ரூபாய் செலுத்தி, நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், பயணிகள் பயணிக்கலாம்.

Continues below advertisement

விதிமுறைகள் என்ன.?

இந்த ஆண்டு ஃபாஸ்டேக் பாஸை, பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து சரியாக ஓராண்டு வரையோ அல்லது அதிகபட்சமாக 200 பயணங்களுக்கோ  பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், இது வணிகப் பயன்பாடு அல்லாத தனி நபர்களின் கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை இந்த வருடாந்திர பாஸ் அளிக்கும்.

இந்த ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியை ஒரு முறை கடப்பது ஒரு பயணமாக கணக்கிடப்படும். இருவழிப் பயணம்(சென்று திரும்புவது) இரண்டு பயணங்களாக கணக்கிடப்படும்.

Continues below advertisement

எப்படி பெறுவது.?

மத்திய சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாகனம் மற்றும் அதனுடன் இணைந்த ஃபாஸ்டேக்கின் தகுதியை சரிபார்த்த பின்னதான் வருடாந்திர பாஸ் செயல்படுத்தப்படும். 

சரிபார்ப்புக்குப் பின், பயனர், ராஜமார்க்யாத்ரா மொபைல் செயலி அல்லது NHAI இணையதளம் மூலம் இந்த வருடத்திற்கான(2025-26) 3,000 ரூபாயை செலுத்தி இந்த பாஸை பெறலாம். இந்த புதிய ஃபாஸ்டேக் பாஸை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பயன்படுத்துவது எப்படி?

இந்த வருடாந்திர பாஸை செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பிரத்யேக இணைப்பு, ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra App) செயலியிலும், NHAI மற்றும் MoRTH ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும்.

எதற்காக இந்த வருடாந்திர பாஸ்?

இந்த புதிய நடைமுறை 60 கிலோ மீட்டர் வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச் சாவடிகள் தொடர்பான நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும். மேலும், ஒற்றை, விலை குறைவான பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாக்குகிறது.

இந்த பாஸை பயன்படுத்துவதன் மூலம், காத்திருப்பு நேரங்களைக் குறைக்க முடியும். கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சுங்கச் சாவடிகளில் ஏற்படும் தகராறுகளைக் குறைப்பதன் மூலமும், லட்சக்கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிமையான பயண அனுபவத்தை இந்த பாஸ் வழங்கும்.

தற்போது, ஒரு சுங்கச் சாவடியை கடக்கும் உள்ளூர் பயணிகளுக்கு மட்டுமே 340 ரூபாய் விலையில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கொள்கை, 2 சுங்கச் சாவடிகளுக்கு இடையிலான 60 கிலோ மீட்டர் தூரம் தொடர்பான நீண்டகால கவலைகளை தீர்க்கும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும், தற்போது, ஒரு சுங்கச் சாவடியை கடப்பதற்கான சராசரி கட்டணம், 50 முதல் 100 ரூபாய் வரை மாறுபடும். ஆனால், இந்த புதிய பாஸ் காரணமாக, இப்போது அந்த தொகை 15 ரூபாயாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறையில், 200 பயணங்களை மேற்கொள்ளும் பயனர்கள், சுங்கச் சாவடி கட்டணமாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், இந்த புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் மூலம், அந்த தொகை வெறும் 3 ஆயிரம் ரூபாயாக குறையும். அதனால், இந்த புதிய திட்டம் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.