டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த 10 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


மல்யுத்த வீரர்களுடன் கைக்கோர்க்கும் விவசாயிகள்:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர் விவசாயிகள். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதனால், அங்கு கிட்டத்தட்ட 2000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து வருபவர்கள் தங்கள் தனியார் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தேசிய தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், டிராக்டர் தள்ளுவண்டிகள் மூலம் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.


சிங்கு எல்லையில், துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.  300 டெல்லி போலீசார் வடக்கு மண்டலத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். திக்ரி பார்டர், நங்லோய் சௌக், பீராகரி சௌக் மற்றும் முண்ட்கா சௌக் ஆகிய இடங்களில் 200க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் துணை ராணுவப் படையுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், புது தில்லி மண்டலத்தில் 1,300க்கும் மேற்பட்ட டெல்லி போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் 13 எச்டி கேமராக்களை பொருத்தியுள்ளோம். மொபைல் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை நாங்கள் அமைத்துள்ளோம்" என்றார். மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக டெல்லி உட்பட நாடு தழுவிய போராட்டங்களை சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.


மது அருந்திய காவல்துறை அதிகாரிகள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதலா?


போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்தில் கடும் குளிர் வீசி வருவதால் படுக்கையை எடுத்து வந்ததாகவும் அப்போது தங்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த வீரர்கள் புகார் கூறியுள்ளனர். பெரும்பாலான மல்யுத்த வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் சுயநினைவின்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


"குடிபோதையில் உள்ள தர்மேந்திரா என்ற போலீஸ்காரர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தாக்கி எங்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார்" என முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தம்பி துஷ்யந்த் போகத்தின் தலையை அடித்து உடைத்ததாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கீதா போகட் குற்றம்சாட்டியுள்ளார்.