உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள், நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 17 நாள்களாக மீட்பு படையினர் மேற்கொண்டு வந்த தொடர் முயற்சிகளின் காரணமாக தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர்.


தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என ஒட்டு மொத்த நாடே பிரார்த்தனை மேற்கொண்டது. மீட்கப்பட்ட செய்தியை கேட்டு தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சி விட்டனர். சிக்கிய தொழிலாளர்களில் மூவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர் ராஜேந்திர பேடியா, சுக்ராம் மற்றும் அனில் என தெரிய வந்துள்ளது.  


அவநம்பிக்கையுடன் காத்து கிடந்த குடும்பத்தினர்:


இவர்களின் குடும்பத்தினர் கிராபெடா கிராமத்தில் வசித்து வருகின்றனர். 17 நாள்களாக அவர்கள் அவநம்பிக்கையுடன் காத்து கிடந்தனர்.
இதுகுறித்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராஜேந்திராவின் தந்தை ஷ்ரவன் கூறுகையில், "இறுதியாக, எனது அழுகுரலுக்கு கடவுள்  செவிசாய்த்துள்ளார். எனது மகனைக் காப்பாற்றியுள்ளனர்" என்றார்.


சுரங்கப்பாதைக்கு வெளியே காத்து கிடந்த அனிலின் சகோதரர் சுனில், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார். "என் சகோதரனை காப்பாற்றியுள்ளார்கள். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் அவருடன் இருந்தேன். எனது சகோதரரின் உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.


கடந்த ஒரு வாரமாக, 40 தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் சுரங்கப்பாதையின் அருகே காத்து கிடந்த சுனில், தான் சந்தித்த சிரமங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இது எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான நேரம். அதிர்ச்சியில் இருந்த அவரது வயதான பெற்றோருக்கு யாரும் உதவவில்லை. உத்தரகாசிக்கு செல்வதற்கான நிதியை எப்படியாவது ஏற்பாடு செய்ய முடியும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.






துக்கத்தில் இருந்தவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு தந்த செய்தி:


தொழிலாளர்களின் கிராமத்தில் கிராம மக்கள், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். சுக்ராமின் தாயார் பார்வதி, தன்னுடைய மகன் சுரங்கப்பாதையில் சிக்கிய செய்தி கேட்டு ஆறுதல் அடைய முடியாத நிலையில் உச்சக்கட்ட துக்கத்தில் இருந்தார். அனிலின் வீட்டில், கடந்த இரண்டு வாரங்களாக அனிலின் தாய் சமைக்கவில்லை. ஆனால், அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினருக்கு உணவை சமைத்து கொடுத்து ஆறுதலாக இருந்துள்ளனர்.


மீட்கப்பட்ட தனது சகோதரர் சுக்ராம் குறித்து பேசிய குஷ்பு, "எங்களின் கிராமத்தில் உள்ள அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்" என்றார். மற்றொரு கிராமவாசியான ராம் குமார் பெடியா, இதுகுறித்து பேசுகையில், "18 முதல் 23 வயதுக்குட்பட்ட 13 இளைஞர்களைக் கொண்ட குழு நவம்பர் 1 ஆம் தேதி கிரபேடாவிலிருந்து சுரங்கப்பாதையில் வேலை செய்யச் சென்றனர். அதில், மூன்று பேர் சுரங்கப்பாதையில் சிக்கினர்" என்றார்.


இதுகுறித்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், "உத்தரகாண்டில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் 17 நாட்கள் நிச்சயமற்ற நிலையில் இருள் மற்றும் நடுங்கும் குளிருக்கு நடுவே இருந்த 41 துணிச்சலான பணியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உங்களின் தைரியத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்" என்றார்.