சமீபத்தில் ஒரு உத்தரவில், குடும்பம் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான பொருள்படும் வகையில் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது.
குடும்ப உறவு என்பது லிவ்விங் டுகெதர் (ஒன்றாக இணைந்து வாழ்தல்) உறவு முறையாகவும் திருமணம் செய்யாத அல்லது பால் புதுமையர் உறவு வடிவமாக மாறலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இம்மாதிரியான வித்தியாசமான குடும்ப அமைப்பு சட்டத்தின்படி முழு பாதுகாப்பு பெறுவதற்கு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 16 அன்று வழங்கிய தீர்ப்பில் (ஆனால், தீர்ப்பு சில நாட்களுக்கு முன்புதான் இணையத்தில் பதிவேற்றப்பட்டது) மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கி உத்தரவிட்டது. முந்தைய திருமணத்தில் அவரின் முதல் குழந்தைக்கே மகப்பேறு விடுப்பை அவர் பெற்றிருந்தார். மகப்பேறு விடுமுறை என்பது முதல் குழந்தை பிறக்கும் போது மட்டுமே அளிக்கப்படுகிறது.
நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எழுதிய தீர்ப்பில், "சட்டம் மற்றும் சமூகத்தில் குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் முக்கிய புரிதல் என்னவென்றால், அது ஒரு தாய் மற்றும் தந்தையுடன் (காலப்போக்கில் மாறாமல் இருக்கும்) அவர்களின் குழந்தைகளுடன் இருக்கும் அமைப்பாக பார்க்கப்படுகிறது. மாறாத தன்மை கொண்டது.
இந்த அனுமானம் இரண்டு சூழலை புறக்கணிக்கிறது. ஒன்று, ஒருவரது குடும்ப அமைப்பில் மாற்றத்திற்கு வழிவகுக்கும் பல சூழ்நிலைகள். இரண்டாவது, பல குடும்பங்கள் இதனை ஏற்று கொள்ள மறுப்பது. குடும்ப உறவு என்பது லிவ்விங் டுகெதர் உறவு முறையாகவும் திருமணம் செய்யாத அல்லது பால் புதுமையர் உறவு வடிவமாக மாறலாம்.
வாழ்க்கைத் துணையின் மரணம், பிரிவு அல்லது விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒரு குடும்பம் ஒற்றைப் பெற்றோர் குடும்பமாக மாறலாம். இதேபோல், குழந்தைகளின் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் (பாரம்பரியமாக "தாய்" மற்றும் "தந்தை" பாத்திரங்களை வகிக்கிறார்கள்) மறுமணம், தத்தெடுப்பு அல்லது வளர்ப்பு மூலம் மாறலாம்.
காதல் மற்றும் குடும்பங்களின் இந்த வெளிப்பாடுகள் வழக்கமானவை அல்ல. ஆனால் அவை அவற்றின் பாரம்பரிய குடும்ப அமைப்பு போலவே உண்மையானவை. குடும்பப் பிரிவின் இத்தகைய வித்தியாசமான வெளிப்பாடுகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, சமூக நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளுக்கும் சமமாக கருத தகுதியானவை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், தன் பாலின ஈர்ப்பை குற்றமற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, மாற்று பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் லிவ்-இன் தம்பதிகளை தத்தெடுக்க அனுமதிப்பது போன்ற பிரச்னையை ஆர்வலர்கள் எழுப்பி வருவதால் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பணியில் இருக்கும் பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன பட்சத்தில், அந்த நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பெண் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை பார்த்து கொள்வதாலேயே அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கும் உரிமையை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.