இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க இம்மாதம் தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டது.  எனினும் கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதால் வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. 


இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக போலி செய்திகள் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றன. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு போலி செய்தி பரவி வருகிறது. அதில் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பும் பின்பும் 5 நாட்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற போலி தகவல் பரவி வருகிறது. 






இந்த செய்தியில் உள்ள தகவல் தவறானது என்று மத்திய செய்தி தகவல் மையம் பதிவிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில்,”சமூக வலைத்தளங்களில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று பரவிவரும் தகவலில் உண்மை இல்லை. எனவே 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் வரும் மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி முன்பதிவு தொடங்க உள்ளது” எனப் பதிவிட்டுள்ளது. 


நாடு முழுவதும் ஏற்கெனவே தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் இது மாதிரியான போலிச் செய்திகள் தடுப்பூசி செலுத்த விரும்புவர்களை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை மக்கள் போதுமான புரிதல் இன்றி சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.