கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.


இந்திய, கனட உறவில் தொடர் சிக்கல்:


இந்தியாவுக்கு எதிராக கனடாவும், கனடாவுக்கு எதிராக இந்தியாவும் மாறி மாறி நடிவடிக்கைகள் எடுத்தன. அந்த வகையில், தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியது. அதை ஏற்ற கனடா, தங்களின் தூதரக அதிகாரிகளில் 41 பேரை அண்மையில் திரும்பப் பெற்றது. கனட தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட விவகாரம் இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.  


இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய விவகாரங்களில் கனட தூதரக அதிகாரிகள் தலையிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


"எங்கள் விவகாரங்களில் கனட தூதரக அதிகாரிகள் தலையிடுகின்றனர்"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமமான எண்ணிக்கையில் தூதரக அதிகாரிகளை வைத்து கொள்வது தொடர்பாக வியன்னா விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவே பொருத்தமான சர்வதேச விதியாகும். எங்கள் பொறுத்தவரை, கனட தூதரக அதிகாரிகள் எங்கள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால், நாங்கள் இந்த விதியை பயன்படுத்தினோம்.


இந்திய, கனட நாடுகளுக்கிடையேயான உறவு கடினமான கட்டத்தில் உள்ளது. கனட அரசியலின் குறிப்பிட்ட பிரிவினர், எங்களுக்கு பிரச்னையாக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் எங்களுக்கு பிரச்னை தந்து வருகிறது என கூற விரும்புகிறேன்" என்றார். 


கனட தாதரக அதிகாரிகளை இந்தியா குறைத்திருப்பது இரு நாடுகளிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் இரண்டு சதவீதமாக உள்ளனர். இதில், சிலர் காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என கோரி வருவது இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது.