ஆளும் பாஜகவை நோக்கி கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றத்தையே அதிர வைப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. இவர், தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆடம்பர பொருள்கள் கேட்டும், விடுமுறை நாள்களில் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்வதற்காக தன்னிடம் மொய்த்ரா அடிக்கடி உதவி கேட்பார் என்றும் மக்களைவை நெறிமுறைகள் குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா?
நாடாளுமன்ற உறுப்பினருக்கான மின்னஞ்சல் ஐடியை மொய்த்ரா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி, அதானிக்கு எதிரான கேள்விகளை அதன் வழியாக தான் அனுப்பியதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், மஹுவா மொய்த்ரா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துப, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபவிடம் மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் வழங்கியதோடு சிபியிடம் புகார் அளித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மொய்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை ஊடகங்களில் ஏன் கசிய வைக்க வேண்டும் என்றும் மக்களவையில் இருந்து தன்னை இடைநீக்கம் செய்ய பாஜக இப்படி செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். தர்ஷன் ஹிராநந்தனியை கட்டாயப்படுத்தி புகார் கடிதத்தில் கையெழுத்திட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்தே, திரிணாமுல் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அமைதி காத்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரும் மேற்குவங்க பொதுச் செயலாளருமான குணால் கோஷி, இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
அமைதி காக்கும் திரிணாமுல் காங்கிரஸ்:
”இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாது. நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. (மொய்த்ரா) இந்த சர்ச்சை பற்றி விளக்கம் அளிக்கலாம் அல்லது பதிலளிக்கலாம். இது தொடர்பாக, நாங்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். ஆனால், இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை" என குணால் கோஷி தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜக சரமாரி கேள்விகளை எழுப்பி வருகிறது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் மௌனம் காக்கிறது என்றால் ஒன்று மொய்த்ராவுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் அல்லது அவர்கள் எதையோ மறைக்க முயற்சி செய்கிறார்கள் என பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "கருத்து தெரிவிக்கமாட்டோம் என்பதே மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எடுத்த அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இதில், மொய்த்ரா விளக்கம் அளிப்பார் என கூறியுள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், 1) கடுமையான விதி மீறல்களில் மொய்த்ரா ஈடுபட்டுள்ளார் என்பதை திரிணாமுல் ஏற்றுக்கொள்கிறதா? 2) அப்படியானால், அவரை பதவி நீக்கம் செய்யாமல் ஏன் இன்னும் தக்க வைத்துக் கொள்கிறது?" என தெரிவித்துள்ளார்.