மத்திய அரசு விரைவில் இ பாஸ்போர்ட் வழங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் பட்டாச்சாரியா வெளியிட்டுள்ளார்.


பாஸ்போர்ட்டுகள் பயோமெட்ரிக் தரவுகளுடன் பாதுகாப்பாக இருக்கும் என்றும், உலகளவில் சுமுகமாக பயணம் செய்ய வழிவகை செய்யும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான அறிவிப்பை கடந்த 2021ம் ஆண்டே நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இ-பாஸ்போர்ட்டில் எலக்ட்ரானிக் சிப் இருக்கும், அது நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இ-பாஸ்போர்ட்கள் போலி பாஸ்போர்ட்டுகளை ஒழிக்க உதவு எனவும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இதுவரை  வழங்கப்பட்ட பாஸ்போர்ட்கள் அச்சிடப்பட்ட கையேடுகளாக  (booklets)வழங்கப்பட்டன.



இ-பாஸ்போர்ட்டில் பதிக்கப்பட்ட மைக்ரோசிப்பில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் தரவு தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல RFID (ரேடியோ-அதிர்வெண் அடையாளம்) மூலமாக அங்கீகரிக்கப்படாத தரவு பரிமாற்றத்தை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 



மேம்படுத்தப்பட்ட ஆவணங்கள் அடையாள திருட்டு, மோசடி ஆகியவற்றைத் தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. மேலும் பாஸ்போர்ட்டின் முன்புறத்தில் உள்ள சிப், இ-பாஸ்போர்ட்டுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட லோகோவுடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


முதற்கட்டமாக அரசு, 20,000 இ பாஸ்போர்ட்களை வினியோகித்துள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து குடிமக்களுக்கும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான செயல்முறையை அரசு தொடங்கும். வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து 36 பாஸ்போர்ட் அலுவலகங்களும் இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்படும்.






இ-பாஸ்போர்ட்கள் சர்வதேச சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ஐசிஏஓ) தரநிலைகளைப் பின்பற்றும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது.



பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் -அரசு இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை தாக்கல் செய்வது முதல் உங்களின் இருப்பிடம் மற்றும் அப்பாயின்மெண்ட் தேதி வரை- அனைத்தும் ஏற்கெனவே இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். அதேபோல இ- பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறையால் பாஸ்போர்ட் கொடுக்கப்படும் நேரமும் (issuance time) பாதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. 


பயனர்களுக்கு ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டு வந்த பிரிண்ட் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டில் இருக்கும் எல்லா அம்சங்கள், சிப்பிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசிக் நகரிலுள்ள ஐஎஸ்பி நிறுவனத்திற்கு இபாஸ்போர்ட் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.