Congress MPs: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் விரைவில் கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்:


கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவையின் மாண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும் கூறி மொத்தம் 146 எம்.பிக்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் மக்களவை உறுப்பினர்கள் 100 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 46 பேரும் அடங்குவர்.  


உரிமைக்குழு விசாரணை:


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட பல எம்.பி.க்களில், 3 பேரின் இடைநீக்கத்தை கூடுதல் பரிசீலனைக்கு சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புமாறு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களான விஜய் வசந்த் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன், அசாமைச் சேர்ந்த அப்துல் காலிக் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்தது தொடர்பான விவகாரம் சிறப்பு உரிமைக் குழு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


இதையும் படிங்க: இன்று காணொலியில் I.N.D.I.A., கூட்டணி ஆலோசனை - தேர்வாகிறார் ஒருங்கிணைப்பாளர்? மம்தா அவுட்..!


மன்னிப்பும், ரத்து நடவடிக்கையும்:


பாஜகவின் சுனில் குமார் சிங் தலைமையிலான சிறப்புரிமைக் குழுவில் திரிணாமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி, திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் இடம்பெற்று இருந்தனர். அந்த குழுவின் முன்பு ஆஜரான, விஜய் வசந்த்,  ஜெயக்குமார் மற்றும் அப்துல் காலிக் ஆகிய 3 பேரும் அவையில் தங்களது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, சம்பவம் நடைபெற்ற அந்த காலகட்டத்தின் சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எம்.பி.க்கள் குழுவிடம் கூறியுள்ளனர். இதனை ஏற்ற சிறப்பு உரிமைக் குழு,  3 பேரின் இடைநீக்கத்தையும் ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது திங்கட்கிழமை அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, விஜய் வசந்த், ஜெயக்குமார் மற்றும் அப்துல் காலிக் ஆகியோரின் இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான அறிவிப்பை,  லோக்சபா செயலகம் அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கமும், இதேமுறையை பின்பற்றி தான் திருமபப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.