நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க அங்குள்ள மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.


சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.


அரசியல் ட்ரெண்டை மாற்றினாரா அசோக் கெலாட்?


மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மற்றும் அக்கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே  பனிப்போர் நிலவி வந்த நிலையில், கட்சியின் மேலிடம் எடுத்த முயற்சியால் அது தற்போது  ஓய்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி, அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல, ஆட்சியை பிடிக்க பாஜகவும் அதிரடி காட்டி வருகிறது. ஆனால், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தேசிய தலைவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் பாஜக முகமாக இருந்த வந்த வசுந்தரா ராஜேவை ஓரங்கட்ட கட்சி மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.


பாஜக அறிவித்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜேவின் பெயரை அறிவித்து, பிரச்னையை சற்று தீர்த்து வைத்தது பாஜக மேலிடம். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 25ஆம் தேதி நடந்த தேர்தலில் 71.64 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ராஜஸ்தானில் பாஜக அலையா?


இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 94 முதல் 114 தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 71 முதல் 91 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பின்போது, முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவின் வசுந்தர ராஜே சிந்தியா முதலமைச்சராக வர வேண்டும் என 35 சதவிகிதத்தினரும் தற்போதைய முதலமைச்சருமான அசோக் கெலாட் வர வேண்டும் என 20 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.