EVM case: கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு:


கடந்த 1982ஆம் ஆண்டுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. பரவூர் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. 1998ஆம் ஆண்டுக்கு பிறகு, வாக்குச்சீட்டுக்கு பதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது அதிகரித்தது.


கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த அனைத்து சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2004ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் வரலாற்று முடிவை எடுத்தது. மக்களவை தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவித்தது.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:


கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தொடக்கத்தில் இருந்தே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதனால், விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. 


யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள விவிபேட் பயன்படுத்தப்பட்டது. வாக்களிக்கும் போது, ​​சீரியல் நம்பர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டு வாக்காளருக்கு வழங்கப்படும்.


கடந்த 2013ஆம் ஆண்டு நோக்சென் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இது முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் விவிபேட் பயன்படுத்தப்பட்டது. தற்போது, மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் மட்டுமே விவிபேட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


உச்சநீதிமன்றத்தில் விசாரணை:


இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் ஒப்புகை சீட்டு மூலம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் மூலம் சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சங்கரநாராயணன், வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், நேஹா ரதி ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, இன்னும் இரண்டு வாரங்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.