மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டில் டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில், அதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கெஜ்ரிவாலுக்கு மிகப் பெரிய நெருக்கடியை தந்துள்ளது.


மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.


கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்:


இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணை கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்தார்.


இதற்கிடையே, ED விசாரித்து வந்த அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


தற்போது, வெளியில் உள்ள கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


ஸ்கெட்ச் போடும் ED:


இந்த நிலையில், மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.


அமலாக்கத்துறையை கடுமையாக சாடியுள்ள ஆம் ஆத்மி, "மற்ற பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. கெஜ்ரிவாலை விசாரிக்க துணை நிலை ஆளுநர் வழங்கிய ஒப்புதல் கடிதத்தை வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளது.


அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் மீதான சர்ச்சையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.