Kedarnath Helicopter: ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த பயணிகள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்:
கேதார்நாத் ஹெலிபேடில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 7 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த, 6 பக்தர்களும் விமானியும் பத்திரமாக உள்ளனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
360 டிகிரியில் சுழன்ற ஹெலிகாப்டர்:
இதுதொடர்பான வீடியோவில், தரையிறங்குவதற்காக ஹெலிபேட் அருகே வந்த ஹெலிகாப்டர் திடீரென விமான ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மலைப்பகுதி என்பதால் காற்று வேகமாக விசியதில், ஹெலிகாப்டர் மெல்ல 360 டிகிரியில் சுழல தொடங்கியுள்ளது. அடுத்த சில நொடிகளில் மேலும் வேகமாக சுழன்றுள்ளது. இதனை கண்ட ஹெலிபேட் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாவலர்கள் அச்சத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். இதனிடயே, ஹெலிகாப்டர் ஹெலிபேட் அமைந்துள்ள பகுதியில் இருந்து விலகி செல்ல, கடுமையாக முயற்சித்த விமான ஓட்டி ஹெலிகாப்டரை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அதனைதொடர்ந்து, ஹெலிபேடிற்கு அருகே சற்று தாழ்வாக இருந்த வெற்று இடத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கியது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேதார்நாத் பயணம்:
கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட நான்கு வழிபாட்டுத் தலங்களில் மூன்றின் திறப்புடன் சார் தாம் யாத்திரை மே 10 அன்று தொடங்கியது. பத்ரிநாத் கோயில் நடை மே 12 அன்று திறக்கப்பட்டது. இந்து மதத்தில் சார் தாம் யாத்திரை ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த பயணம் பொதுவாக ஏப்ரல்-மே முதல் அக்டோபர்-நவம்பர் வரை நடக்கும்.
ஒருவர் கடிகார திசையில் சார் தாம் யாத்திரையை முடிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. எனவே, யாத்திரை யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரியை நோக்கி, கேதார்நாத் வழியாகச் சென்று, இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சார்தாம் யாத்திரைக்கு வரும் யாத்ரீகர்கள் அனைவரும் பதிவு செய்வதை உத்தரகாண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் ஆஃப்லைன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் பதிவு செய்த பின்னரே பக்தர்கள் சார்தாம் யாத்திரைக்கு வர முடியும். அப்படி கேதார்நாத் வரும் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் வசதியும் அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.