மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் பள்ளி பிளஸ் 2 மாணவி காம்யா கார்த்திகேயன், கடற்படை அதிகாரியான தன் தந்தை கார்த்திகேயனுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற பெருமையை படைத்தார்.
இந்திய கடற்படை வாழ்த்து:
மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் படிக்கும் 16 வயதான காம்யா கார்த்திகேயன் எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு இந்திய கடற்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தந்தை கார்த்திகேயனும், அவரது மகள் காம்யா கார்த்திகேயனும், கடந்த ஏப்ரல் 3ம் தேதி பயணத்தை தொடங்கி கடந்த மே 20ம் தேதி 8849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர்.
இதன்மூலம், ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தை ஏறும் சவாலில் காம்யா இதுவரை 6 சிகரங்களை கண்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்துள்ளது. இவர் அடுத்ததாக ஏழாவது பயணமாக வருகின்ற டிசம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையில் ஏறி ‘7 Summits Challenge'-ஐ நிறைவு செய்யும் இளைய பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
காம்யா கடந்த 2020ம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள அகோன்காகுவா மலையின் மீது ஏறி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது பிப்ரவரி 2020ல் மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, இளம் காம்யா கார்த்திகேயன் அனைவருக்கும் ஒரு உத்வேகம் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று பாராட்டினார்.
பால் சக்தி விருது வென்றுள்ள காம்யா கார்த்திகேயன்:
காம்யா கார்த்திகேயன் உயரமான சிகரங்களை ஏறியதற்கு பாராட்டும் விதமாக பிரதமரின் தேசிய பால் சக்தி விருதை வென்றுள்ளார்.
இதுவரை காம்யா ஏறியுள்ள சிகரங்கள்:
காம்யா கார்த்திகேயன், கடந்த 2015ம் ஆண்டில் சந்திரசிலா சிகரத்தை (12 ஆயிரம் அடி) ஏறி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஹர் கி டூனையும் (13, 500 அடி) தொட்டார். தொடர்ந்து, 2017ம் ஆண்டில் ரூப்குண்ட் ஏரி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி கலக்கினார்.