Elon Musk: இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்:


உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. 


ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்று பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பினார் எலான் மஸ்க். அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என,  மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தினார்.


அலுவகங்கள்  மூடல்


டிவிட்டர் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி, மும்பையில் இருந்த ட்விட்டர் அலுவகம் மூடப்பட்டுள்ளது. தற்போது பெங்ளூருவில் மட்டும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது மூடப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிய வரும் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். 


‘செலவு குறைப்பு நடவடிக்கை


ஏற்கனவே இந்தியாவில் உள்ள 3 அலுவலகங்களையும் மூடுவதற்கான நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டிருந்தார். ஆனால் தற்போது 2 அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில், மேலும் ஒரு அலுவலகம் மட்டும் இனி செயல்படுமா? இனி என்ன செய்யப் போகிறார் என பல கேள்விகள் எழுந்துள்ளது.


ஒரு புறம் செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் வருவாயை அதிகரிக்க போதிய நடவடிக்கை இல்லை என்றே தெரிகிறது. வருவாயை அதிகரிக்க பல்வேறு புதிய அறிவிப்பை வெளியிட்டார் எலான் மஸ்க். குறிப்பாக ப்ளூ டிக்கிற்கு கட்டணம் போன்று அறிவித்திருந்ததார். அதே போன்று செலவு குறைப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை (90 சதவீதம்) எலான் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.