சிறுவனைக்கொன்ற வழக்கில் தாய் யானையும், குட்டி யானையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் வனத்துறையிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பது உண்மை தான். ஆனால் வனவிலங்குகளுக்காக என்ற கேள்வியினை ஏற்படுத்தியது கொலை வழக்கு ஒன்றில் யானைகள் கைதான சம்பவம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில், கோலாகட் மாவட்டத்தில் போகாகத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜித்தேன் கோகாய் என்பவர் யானைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் 14 வயதான சிறுவன் ஒருவர் தேயிலைத்தோட்டத்திற்கு அருகில் சுற்றித்திரிந்த குட்டி யானையினை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அருகில் இருந்த யானை தாய்ப்பாசத்தில், தனது குழந்தையினை ஏதோ செய்கிறார்கள் என்று அறிந்து அச்சிறுவனைத்தாக்கியதோடு மிதித்து கொலையும் செய்துள்ளது.
இதனையடுத்து யானைத்தாக்கி மகனை இழந்த சிறுவனின் பெற்றோர் போகாகத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரினை ஏற்றுக்கொண்ட போலீசார், சிறுவனைத் தாக்கியதாக கூறப்படும் தாய் யானை மற்றும் அதன் குட்டி யானையினை அதன் உரிமையாளருடன் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்ததோடு சங்கிலியில் கட்டி வைத்திருந்தனர். மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாய் யானை மற்றும் குட்டி யானை 14 வயது சிறுவனைக்கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யானையினை விசாரணைக்குப்பிறகு, போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அசாமில் சிறுவனைத்தாக்கி கொலை செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், தாய் யானை மற்றும் அதன் குட்டி யானை காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டது பெரும் வாதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தற்பொழுது அனைவரும் கருத்துக்களை பகிரும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. வனவிலங்குகள் அருகில் சென்றது அப்பையனின் தவறு எனவும், கைது செய்ய வேண்டியது யானைகளை அல்ல அதன் உரிமையாளர்கள் தான் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, அனைவருக்கும் பொதுவான விஷயம் தான், ஆனால் வாய் இல்லா இந்த ஜீவன்களை விசாரணைக்காக அழைத்து வந்ததோடு மட்டுமில்லாமல், விசாரணை முடியும் வரை சங்கிலியால் கட்டி வைத்து குற்றம் என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.