தீப்பற்றி எரியும் இ-பைக்குகள் குறித்து தினந்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மின்னணு இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் தர வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


''மின்னணு இருசக்கர வாகனங்கள் சம்பந்தமாக பல்வேறு அசம்பாவிதங்கள் கடந்த 2 மாதங்களில் நடந்துள்ளன. இதில் சிலர் தங்களின் வாழ்க்கையையே இழந்துள்ளது துரதிர்ஷ்டமான ஒன்றாகும். இத்தகைய விபத்துகளில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 


இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க வல்லுநர் குழுவையும் அமைத்துள்ளோம். தீர்வுகளை வழங்கவும் பரிந்துரை செய்துள்ளோம். குழுவின் அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தேவையான நடவடிக்கையை எடுக்க உத்தரவு வழங்கப்படும். மின்னணு வாகனங்களுக்கான தர வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். 


அலட்சியத்துடன் செயல்படும் மின்னணு வாகன நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். பிரச்சினைக்கு உரிய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்.


அதே நேரத்தில் மின்னணு வாகன நிறுவனங்கள் தங்களின் பிரச்சினைக்கு உரிய அனைத்து வாகனங்களையும் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ், ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில், உறுதியுடன் உள்ளோம்''.


இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 


சென்னை, போரூரில் நேற்று இ- பைக் ஷோரூமில் சார்ஜிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 17 பைக்குகள் எரிந்து நாசமாகின. அதேபோல வேலூர் மாவட்டத்தில் அல்லாபுரம் சாலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இ- பைக் வெடித்ததில் தந்தை, மகள் இருவருமே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோலத் திருவள்ளூரில் விவசாயி ஒருவரின் இ-பைக் திடீரெனத் தீப்பிடித்து, எரிந்தது. 


தமிழ்நாட்டில் மட்டுமே இந்த சம்பவங்கள் நடக்கவில்லை. புனே, குர்கான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இ - பைக்குகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. 


மின்னணு இருசக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வாகனங்கள் தீப்பிடித்து எரியும் போக்கு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI