வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் தொகுதிக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும்.


ராகுல்காந்தி தகுதிநீக்கம்:


அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது.


சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு ராகுல்காந்திக்கு சாதகமாக வந்தால் இடைத்தேர்தலுக்கான சூழல் ஏற்படாது.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 2015, பிரிவு 151ஏ கீழ், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ்தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல:


இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி. நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன்.


அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம் வந்தது எப்படி? மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இதுவரை அதற்கு பதில் இல்லை.


அதானி குறித்து நான் அடுத்த முறை பேசக்கூடாது என்பதற்காகவே என்னைத் தகுதி நீக்கம் செய்துள்ளனர். லண்டனில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க, மக்களவையில் சபாநாயகரிடம் அனுமதி கோரி இருந்தேன். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை" என்றார்.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்:


மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போதைக்கு, ஜலந்தர் மற்றும் வயநாடு தொகுதிகள் காலியாக உள்ளன.


கடந்த 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் தோற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார்.