தமிழகம், மேற்கு வங்கம், அசாம், பாண்டிச்சேரி மற்றும் கேரள ஆகிய மாநிலங்களுக்கான ஆட்சிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு, மேற்கண்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.


இதன்படி தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அசாம் மாநிலத்திலும் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று நிறைவு பெற்றது. மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 4 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


இந்த நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் நேற்று வரையில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள், நகை மற்றும் மதுபான பாட்டில்களின் மதிப்பு பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அசாம் மாநிலத்தில் ரூ.27.09 கோடி ரொக்கமும், ரூ.41.97 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் உள்பட மொத்தம் ரூ.122.34 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


புதுச்சேரியில் ரொக்கம் ரூ.5.52 கோடியும், ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உள்பட மொத்தம் ரூ.36.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ரொக்கமாக ரூ.22.88 கோடியும், ரூ.5.16 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும் என மொத்தம் ரூ.84.91 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




மேற்கு வங்கத்தில் ரொக்கம் ரூ.50.71 கோடியும், மதுபாட்டில்கள் ரூ.30.11 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300.11 கோடி மதிப்பிலான பணம், நகை, பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களிலே அதிகபட்சமாக தமிழகத்தில் ரொக்கமாக ரூ.236.69 கோடியும், மதுபாட்டில்கள் ரூ.5.27 கோடியும் என மொத்தம் ரூ.446.28 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம், நகை மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ஆங்காங்கே நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ரூ.10.84 கோடி மதிப்பிலான பணம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




இந்த 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக ரொக்கமாக ரூ.344.85 கோடியும், ரூ.85 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும் என மொத்தமாக ரூ.1001.43 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் பறிமுதல் செய்தவற்றின் மதிப்பு ரூபாய் 1000 கோடியை கடந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.