Pot Symbol: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிர்ச்சி:
தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கிய பானை சின்னத்தை இந்த முறையும் பெற்றுவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி மேற்கொண்டது.
இதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சின்னம் கேட்டு சமர்பித்த விண்ணப்பதில் தேவையான தகவல்களை அளிக்கவில்லை என்றும் பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கான தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு என்ன காரணம்?
எந்தெந்த தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த விரும்புகிறதோ அந்த தொகுதிகளின் விவரங்களை சின்னம் கேட்டு சமர்பித்த விண்ணப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிடவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
விண்ணப்பதை சமர்பிக்கும்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ நிர்வாகி யாரும் இல்லை என்றும் கடந்த 3 நிதியாண்டுகளாக வரவு செலவு அறிக்கையை சமர்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட எவ்வளவு செலவானது என்பது தொடர்பான விவரத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சமர்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கு கடந்த இரண்டு தேர்தல்களிலும் பதிவான வாக்குகளில் 1 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த நிபந்தனையை விடுதலை சிறுத்தைகள் கட்சி பூர்த்தி செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், சிதம்பரம் தொகுதியில் மட்டுமே அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட்டது. விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
அந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1.17 சதவிகித வாக்குகள் கிடைத்தது. அடுத்து நடந்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு 4 இல் வெற்றிபெற்றிருந்தாலும், 0.99 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.