ஜார்க்கண்ட் முதலமைச்சராக கடந்த 2019ஆம் ஆண்டு ஹேமந்த் சோரன் பதவியேற்றார். இவருடைய ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் இவர் மீது பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமாக ரகுபர் தாஸ் புகார் அளித்தார். அதில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னுடைய பெயரில் சுரங்கம் அமைக்க உரிமம் ஒன்று கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை எதிர்கட்சிகள் ஆளுநரிடம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்த நில விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏன் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட கூடாது என்று கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்தப் புகார் தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வரும் மே 10ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான புகாரை பாஜக ஆளுநரிடம் அளித்தது. அவர் அந்தப் புகாரை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையம் சார்பில் முதலில் தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சுரங்க உரிமம் தவிர முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது மற்றொரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தன்னுடைய மனைவி கல்பனா சோரன் பெயரில் ஐடி பூங்கா ஒன்றிலிருந்து 11 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொழில்துறையும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கட்டுப்பாட்டிற்குள் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முக்கிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வாரம் அவர் டெல்லி செல்ல உள்ள நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 9ஏ-ன்படி மக்கள் பிரதிநிதி ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது தன்னுடைய உறவினர்கள் பெயரிலே அரசு உடன் ஏதாவது ஒப்பந்தம் அல்லது தொழில்முறை ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. இந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்