காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் செல்ல உள்ளது.
நடைபயணத்தின்போது, யூடியூபர் சம்தீஷ் பாட்டியா என்பவருக்கு ராகுல் காந்தி நேர்காணல் வழங்கினார். அதில், பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன.
"நான் சின்ன வயசுல அம்மாகிட்ட போயி ஒரு கேள்வி கேட்டேன். 'அம்மா, நான் நல்லா இருக்கேனா?' என்று கேட்டேன். என்னைப் பார்த்து, 'இல்லை, நீ சராசரியாகத்தான் இருக்க' என அம்மா பதில் அளித்தார்" என ராகுல் காந்தி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதை, தாங்களேதானே சொல்கிறீர்கள், அப்படி ஒன்று நடக்கவில்லைதானே என சம்தீஷ் பாட்டியா கேள்வி எழுப்பினார். அதற்கு, "என் அம்மா அப்படித்தான். என் அம்மா என்னை சாதாரணமாகவே நடத்துவார். என் தந்தையும் கூட. என் குடும்பம் முழுவதும் அப்படித்தான்.
நீங்கள் ஏதாவது சொன்னால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்கள் உங்களை சரியாக வழி நடத்துவார்கள். அதனால்தான், 'நீ சராசரியாக இருக்கிறாய்' என்றார். அது என் மனதில் அப்படியே பதிந்தது" என ராகுல் காந்தி தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய ராகுல் காந்தி, "நானே, எனது காலணிகளை வாங்குவேன். ஆனால், சில நேரங்களில் எனது அம்மாவும் சகோதரியும் எனக்கு காலணிகளை வாங்கி தருவார்கள். அரசியலில் நண்பர்கள் சிலரும் எனக்கு காலணிகளை பரிசாக வழங்குவார்கள்" என்றார்
பாஜகவினர் யாரேனும் காலணிகளை பரிசாக அளித்தார்களா என சம்தீஷ் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு, "அவர்கள் என் மீது காலணிகளை வீசதான் செய்வார்கள்" என்றார். அவர்களை நோக்கி நீங்கள் திரும்ப காலணிகளை வீசுவீர்களா என கேட்டதற்கு, "மாட்டேன். மாட்டவே மாட்டேன்" என ராகுல் பதில் அளித்தார்.
இந்த நேர்காணலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகுல் காந்தி, "கடவுள், இந்திய விழுமியம் மற்றும் பலவற்றைப் பற்றி, இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, @UFbySamdishh-உடன் பேசி உள்ளேன். கபடமற்று பேசி இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.