ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும் அதனால் ஏற்படும் அயர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இன்னும் சில பெண்கள், 'அந்த' நாட்களில் வலியால் துடித்துப் போவதையும் கண்டிருப்போம். அந்த நேரங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், சூழல் காரணமாக வீட்டு வேலைகள், அலுவல் பணிகள் இரண்டிலுமே பெரும்பாலான பெண்கள் ஈடுபட வேண்டியுள்ளது.


இதைக் கருத்தில்கொண்டு, சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக பிஹார் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.



அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில், அனைத்துப் பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறையும் அளிக்கப்பட்டது.


முதல் நாளோ அல்லது இரண்டாவது நாளோ விடுமுறை


தற்போது ஒடிசா மாநிலத்தில், அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநிலத் துணை முதல்வர் பிரவதி பரிடா தெரிவித்துள்ளார். கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். பெண்கள், மாதவிடாயின் முதல் நாளோ, இரண்டாவது நாளோ விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் பிரவதி அறிவித்துள்ளார்.



சில தனியார் நிறுவனங்களும் மாதவிடாய் விடுமுறையை அளிக்கத் தொடங்கியுள்ளன. ஸொமாட்டோ உணவு விநியோக நிறுவனம், ஆண்டுக்கு 10 நாட்கள், சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை தன் பெண் ஊழியர்களுக்கு அளிக்கிறது. 2020 முதல் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.


மத்திய அரசு சொல்வது என்ன?


இதற்கிடையே மாதவிடாய் விடுமுறை குறித்துப் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ’’அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறையைக் கட்டாயமாக்கும் எண்ணம், தற்போது இல்லை. எனினும் மாதவிடாய் சுகாதாரத்தை அரசு உறுதி செய்யும்’’ என்று அண்மையில் தெரிவித்து இருந்தார்.




இந்த நிலையில், பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுமுறை குறித்த மாதிரித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரம் நீதிமன்றத் தலையீட்டைக் காட்டிலும் கொள்கை உருவாக்கத்தின்கீழ் வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.


முன்மாதிரி தமிழ்நாடு


பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலாகக் கொண்டுவந்தது காமராசர் தலைமையிலான தமிழ்நாடு அரசுதான். அதற்குப் பின்பே பிற மாநிலங்களும் மத்திய அரசும் மதிய உணவுத் திட்டத்தைப் பள்ளிகளில் அறிமுகம் செய்தன.


 அதேபோல மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடே அறிமுகம் செய்தது. இத்திட்டம், கிரஹலட்சுமி திட்டம் என்ற பெயரில் கர்நாடகாவிலும் மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில், தெலங்கானாவிலும், சற்றே மாற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பெண்கள் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 காலை உணவுத் திட்டம்


அதேபோல பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார், இந்தத் திட்டம் பிறகு தெலங்கானாவிலும் கனடாவிலும் கொண்டு வரப்பட்டது.


அதேபோல அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ- மாணவிகளின் உயர் கல்விக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டில் எப்போது?


இந்த நிலையில் தமிழ்நாட்டில் பணிபுரியும் அலுவலகங்களில், ஊதியத்துடன் கூடிய கட்டாய மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் அறிவிப்பும் வெளியாக வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன்மூலம் மாதவிடாய் விடுப்பால், ஊதியமும் வேலையும் பாதிக்கப்படும் என்ற பெண்களின் அச்சம் போக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.