Eknath Shinde: பாஜக கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை:

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று எச்சரிக்கும் விதமாக பேசியிருந்தார். இது கொலை மிரட்டல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவோ அல்லது சிவசேனா தலைவருக்கும் அவரது கூட்டாளியான மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலும் சொல்லப்பட்டு இருப்பதால் அவரது கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

சொன்னது என்ன?

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எனது காரில் குண்டுகள் இருப்பதாக போலீசாருக்கு மின்னஞ்சல்கள் வந்தன. அதற்கு நான் பயப்படவில்லை. முன்பும் மிரட்டல்கள் வந்தன... முயற்சிகள் நடந்தன, ஆனால் நான் பயப்படவில்லை. என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னை லேசாக எடுத்துக் கொண்டவர்களிடம் நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். நான் ஒரு சாதாரண கட்சித் தொண்டன்... ஆனால் நான் பாலாசாகேப்பின் (தாக்கரே, சிவசேனாவின் நிறுவனர்) ஒரு தொண்டன். எல்லோரும் என்னை இந்தப் புரிதலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று 2022 ஆம் ஆண்டு கலகம் சிவசேனாவைப் பிரித்து, உத்தவ் தாக்கரேவின் காங்கிரஸ், NCP ஆதரவு அரசாங்கத்தை வீழ்த்திய ஷிண்டே குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சியில் பங்கு

தொடர்ந்து பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதில் தனது பங்கைக் குறிப்பிட்டு பேசுகையில் " 2022 இல் நான் அரசாங்கத்தை மாற்றினேன் (மேலும்) 2024 தேர்தலுக்கு முன்னதாக சட்டமன்றத்தில் எனது முதல் உரையில் ஃபட்னாவிஸ் 200 இடங்களுக்கு மேல் பெறுவார் என்று சொன்னேன்... எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் நான் சொல்கிறேன், என்னை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த குறிப்பைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு" இந்த எச்சரிக்கை என்று ஷிண்டே குறிப்பிட்டார்.

கூட்டணியில் குழப்பம்:

ஷிண்டேவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.  சேனா எம்எல்ஏக்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டதும் அதிருப்திக்கும் மேலும் காரணமாகும். ஆனால், இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும் மாநில அரசு கூறியது. அதேநேரம், கடந்த ஆண்டு தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த போதிலும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆதரவாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொன்னதால் ஷிண்டே அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராய்காட் மற்றும் நாசிக் (2027 ஆம் ஆண்டு அடுத்த கும்பமேளா நடைபெறுவதால் இது ஒரு குறிப்பிடத்தக்க பதவி) மாவட்டங்களுக்கான 'பாதுகாவலர் அமைச்சர்கள்' மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து முதலில் ஷிண்டே விலக்கப்பட்டதும் உராய்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஃபட்னாவிஸை நேரில் சந்திப்பதை ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பாஜக தரப்பு தெரிவித்து வருகிறது.