உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பெண் ஆசிரியர் ஒருவரை வகுப்பறையில் ஐ லவ் யூ என்று சொல்லி துன்புறத்தியதாக 3 பள்ளி மாணவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்த சம்பவத்தில் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 28 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், 3 மாணவர்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்தும்போது குறுக்கிட்டு அவரிடம் ஐ லவ் யூ என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவை கெத்துகாக அந்த மாணவர்களே தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். 


உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருபாலர் பயிலும் பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம்போல் அவர் வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருந்தபோது வகுப்பில் இருந்த 3 மாணவர்களான அமன், கைப், அதாஷ் ஆகியோர் ஆசிரியை பார்த்து ஐ லவ் யூ என சொல்லியுள்ளனர். 


இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை மாணவர்களை தனியாக அழைத்து, இதுபோன்று ஆசிரியரிடம் நடந்துகொள்வது தவறானது என அட்வைஸ் செய்துள்ளார், இதை எதையும் காதில் வாங்காத அந்த மாணவர்கள் மீண்டும் ஆசிரியையிடம் ஐ லவ் யூ என கூறி, அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். வகுப்பறையில் இருந்த பெண் மாணவிகள் உள்பட அனைவரும் இதை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாத ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியே சென்றுள்ளார். 






தொடர்ந்து, சிறிதுநேரத்திற்கு பிறகு இடைவேளையில் ஆசிரியை பள்ளி வளாகத்தில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 மாணவர்களும் ஆசிரியை பார்த்து பொதுவெளியில் ஐ லவ் யூ மேம் ஜி, ஓய், ஐ லவ் யூ மேரி ஜான் என்று சத்தமாக அழைத்துள்ளனர். 


ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த ஆசிரியை, மாணவர்களின் இந்த செயல் குறித்து மீரட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றசாட்டப்பட்ட 3 மாணவர்களில் ஒருவரான அமான் என்ற மாணவரின் சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் நடந்தபோது, குற்றத்திற்கு உடந்தையாக இருந்து, ஆசிரியை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 


குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது ஐடி சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் முறையான புகார் பதிவு செய்யப்பட்டது, அவர்களில் மூன்று பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்"ஆசிரியையின் புகாரைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் மீது பிரிவு 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி), ஐபிசி 500 (அவதூறு) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.