வங்கி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 


ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கைது


வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் நரேஷ் கோயல் மும்பையில் கைது செய்யப்பட்டார். நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ ஏற்கெனவே சோதனை மேற்கொண்டது. தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கோயல், அவரது மனைவி அனிதா மீது அமலாக்கத்துறை புதிய பணமோசடி வழக்கை பதிவு செய்தது. 


சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின்படி, மும்பையில் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள கனரா வங்கி தலைமை பொது மேலாளரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சதி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் கிரிமினல் துஷ்பிரயோகம் ஆகிய புகார்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையும் மும்பை மற்றும் டெல்லியில் கோயலுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. விமான நிறுவனத்தின் முன்னாள் ஆடிட்டர் உள்ளிட்ட நெருங்கிய தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  கடும் நஷ்டத்தை சந்தித்த ஜெட் ஏர்வேஸ் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது.  திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ்சை ஜாலான் கால்ராக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 


ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்:


இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கடந்த 1992ஆம் ஆண்டு நரேஷ் கோயல் தொடங்கினார்.  இந்திய விமான சேவையில் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த அந்நிறுவனம்  2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 


குறிப்பாக 2017-18 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.1,000 கோடி நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியது. தொடர்ந்து, 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை,  ஜாலான் - கால்ராக் வாங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நரேஷ் கோயலுக்கு அமலாக்கத்துறை இரண்டு சம்மன்களை அனுப்பியது. அதையேற்று அவர் ஆஜராகாத நிலையில் தான், 74 வயதான நரேஷ் கோயல் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.