ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் மீண்டும் இன்று அதிகாலை 5.17 மணி அளவில்  3.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று,  வெள்ளிக்கிழமை (13/01/2023) இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா என்று பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.


நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ (31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 டிகிரி கிழக்கு), சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.


உயிரிழப்போ, பொருள் சேதமோ இதுவரை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கு முன்னதாக இந்த வாரத்தில் மட்டும், 


இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி அருகே செவ்வாய்க்கிழமை காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை (09/01/2023) 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






இந்த வாரத்தில் மட்டும் இமாச்சல் பிரதேசத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.  ஏற்கனவே கடந்த எட்டு நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி மட்டும் சம்பா மாவட்டத்தில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை தெரிவித்தது.