சபரிமலையில் உள்ள பம்பை நதியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


இ-கோலி பாக்டீரியா:


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த முறை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. மகரஜோதி தரிசனத்தை காண நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி 14 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வந்த நிலையில், கோயிலுக்கு முன்பதிவு செய்யாமல் வர வேண்டாம் எனவும் பக்தர்களை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 


இந்நிலையில் சபரிமலையில் உள்ள பம்பை நதியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பம்பை நதியில் உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.